புதுச்சேரி: முருங்கைபாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்தில், சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, சுடுகளிமண் சிற்பப் பூங்காவினை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று (பிப். 9) திறந்து வைத்து பார்வையிட்டார்.
மேலும், கலை மற்றும் கைவினை கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள 40 கிலோவாட் சூரிய சக்தி உற்பத்தி நிலையத்தையும், துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, சுற்றுலாத்துறைச் செயலர் நெடுஞ்செழியன், பத்மஸ்ரீ விருது பெற்ற சுடுகளிமண் சிற்பக் கலைஞர் முனுசாமி, அரசு அலுவலர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
சுற்றுலா முதலீட்டாளர்கள் மாநாடு
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “புதுச்சேரியில் சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் புதுச்சேரிக்கான சுற்றுலாத் திட்டங்கள் வர வாய்ப்பு இருக்கிறது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சில திட்டவரைவுகள் மத்திய அரசுக்கு அளிக்கப்படுகிறது. அதில் சில திட்டங்கள் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் போது, புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரம் உயரும். ஏற்கனவே, சுற்றுலா முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது. அதில் முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். புதுச்சேரியில் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்ய பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
தற்போது, ரூ.5 கோடி செலவில் 40 கி.வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டிக்கிறது. இயற்கை வழியாக மின் உற்பத்தி செய்யும் திட்டங்களும் வர இருக்கிறது. வளர்ச்சியடைந்த, புதுமையான மாநிலமாக, புதுச்சேரி மாறுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கிறது.
சீருடை விவகாரம்
அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும், தங்களது தொகுதிகளுக்கு சில திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். புதுச்சேரிக்கென்று சில திட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று கேட்கிறார்கள். அரசு அவர்களுக்கு முழுமையான ஆதரவு அளிக்கும். முதலமைச்சரும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்.
என்னைச் சந்தித்த சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பாராட்டினேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று, அவர்களது தொகுதிகளில் தடுப்பூசித் திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்து சென்றிருக்கிறார்கள். புதுச்சேரியில் மாணவர்களுக்கான சீருடையைப் பொருத்தமட்டில், பள்ளிக் கல்வித்துறை அதற்கான நடவடிக்கை எடுக்கும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: "வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல்" - பிரதமர் மோடி