புதுச்சேரி: அண்மையில் ஹைதராபாத் சென்றிருந்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று (மே.25) புதுச்சேரி திரும்பினார். பல தொண்டு நிறுவனங்கள் வழங்கிய முகக் கவசங்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், கிருமிநாசினிகள் போன்ற கரோனா பொருள்களை புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் முன்னிலையில், சுகாதாரத்துறை அலுவலர்களிடம் விமான நிலையத்தில் அவர் ஒப்படைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "10 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவி ஏற்ப்புக்கு ஒப்புதல் அளிப்பதற்காக ஹைதராபாத் சென்றிருந்தேன். அங்கே பல தொண்டு நிறுவனங்களிடம் இருந்து தெலங்கானா மாநிலத்துக்கு பல உதவிகள் பெற்ற நிலையில், புதுச்சேரி மாநிலத்துக்கும் நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்தேன். அந்த வேண்டுகோளுக்கிணங்க பல தொண்டு நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளித்து நன்கொடை மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கி உதவி உள்ளன.
அதேபோல், டாக்டர்ஸ் ரெட்டிஸ் லேப் தயாரித்த 2 டிஜி மருந்து, பரிசோதனைக்காக இங்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அவர்களோடு உரையாடியபொழுது இந்த மருந்துக்கு நல்ல பலன் உள்ளது எனத் தெரிவித்தனர். நான்காவது நாளில் நோயாளிகள் ஆக்ஸிஜன் துணையின்றி சுவாசிக்க இந்த மருந்து உதவும் என்றனர்.
இன்னும் ஓரிரு வாரத்தில் அனைத்து மாநிலங்களிலும் இது கிடைக்கும். ஸ்புட்னிக் தடுப்பூசி தெலங்கானாவில் மூன்று இடங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்தை புதுச்சேரியில் தயாரிக்க நிறுவனம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா உயிரிழப்புகளைக் குறைக்கும் `ப்ரோனிங்’ சிகிச்சை முறை!