சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவுக்கு 73 இடங்கள் உள்ள நிலையில், அம்மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்ய சபா இடத்தில் கே.அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து அவரை தமிழ்நாடு மாநில பாஜக தலைவராகக் கட்சி மேலிடம் நியமித்தது. அதுமுதலே மாநிலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தி மாநிலத்தில் பாஜகவை ஒரு நேரடி அமைப்பாக மாற்றி வருகிறார்.
அடுத்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் கொள்கை விவாதத்தில் கலந்து கொள்ளும் நான்கு உறுப்பினர்களை பாஜக பிரதிநிதிகளில் ஒருவராகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டு உள்ளார். லண்டனில் பாஜக ஏற்பாடு செய்த மாநாட்டிலும் அவர் சிறப்பாகப் பேச்சாளராக அழைக்கப்பட்டார்.
வரும் ஜூலை 28ஆம் தேதி முதல், 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடத்த அண்ணாமலை திட்டமிட்டு உள்ளார். ராமேஸ்வரத்தில் தொடங்க உள்ள இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மத்திய கொள்கை மற்றும் வளர்ச்சி மேம்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநர் சி. ராஜீவ் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக அண்ணாமலை, ஆரம்பம் முதலே கட்சியின் வளர்ச்சி பணியாற்றி வருகிறார். அவரால் கட்சி வளர்ச்சியடைந்து உள்ளது. மேலும், மாநிலத்தில் ஆக்ரோஷமான மற்றும் ஆளும் திமுக அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்படப் பல பிரச்சினைகளை அண்ணாமலை முன்னெடுத்து உள்ளார். மேலும், அண்ணாமலை மாநிலங்களவுக்கு நியமனம் செய்யப்பட்டால், அது மாநிலத்தில் பாஜகவின் வாய்ப்புக்கு வலு சேர்க்கும் வகையில் இருக்கும்" என்று அவர் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாகும் மாநிலங்களவை பதவிக்கு அண்ணாமலையின் பெயர் பரிசீலனையில் உள்ளதாகப் பேச்சுக்கள் அடிபடும் நிலையில் ராஜீவின் கருத்து அதனை உறுதி செய்யும் வகையில் உள்ளதாகப் பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்து பின்னர் மாநிலங்களவை உறுப்பினரான தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Adani : வங்காளதேச பிரதமருடன் கவுதம் அதானி சந்திப்பு... கோடா மின்உற்பத்தி ஆலை ஒப்படைப்பு!