பாலசோர்: ஒடிசா மாநிலத்தில் நேற்று (ஜூன் 2) இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் 2 ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்து சம்பவம் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. இந்த கோர விபத்தில் தற்போது வரை 238 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் மற்றும் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாவும் மீட்புக் குழு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இதே போன்ற ஒரு கோர விபத்து சம்பவம் பல வருடங்களுக்கு முன்னரும் இதே பகுதியில் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமையான நேற்று இரவு மீண்டும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சம்பந்தப்பட்ட மற்றொரு ரயில் விபத்துக்குள்ளாகியதில் ஒடிசா மாநிலம் மிகப் பெரிய சோகத்தைக் கண்டுள்ளது.
முன்னதாக நிகழ்ந்த ரயில் விபத்தானது கடந்த 2009ஆம் ஆண்டு நிகழ்ந்த இதே போன்ற ஒரு ரயில் விபத்து சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. அதாவது 2009ஆம் ஆண்டு நடந்த விபத்தும் இதே போல வெள்ளிக்கிழமை ஏற்பட்டதுதான். ஆகையால் ஒடிசா மாநிலம் தற்போது இரண்டு கருப்பு வெள்ளிக்கிழமைகளைக் கண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 13, 2009 வெள்ளிக்கிழமை அன்று, ஒடிசாவில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்டது. அதில் கிட்டத்தட்ட 16 பயணிகள் உயிரிழந்தனர். மேலும், 161 பேர் படுகாயம் அடைந்தனர். தற்போது நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட அளவிற்கு அப்போதைய சம்பவத்தில் உயிரிழப்புகள் அதிகம் இல்லை என்றாலும், அன்று இதுவும் மிகப்பெரிய கோர விபத்து சம்பவம்தான்.
இந்த கோரமண்டல் விரைவு ரயிலானது தமிழ்நாட்டின் சென்னை சென்ட்ரலையும் - மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுராவையும் இணைக்கிறது. கடந்த 2009ஆம் ஆண்டு தடம் புரண்ட 13 பெட்டிகளில், 11 படுக்கை வகுப்பு மற்றும் 2 பொது வகுப்பைச் சேர்ந்தவை. இந்த ரயில் அதிவேகமாக ஓடியதில், ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையத்தைக் கடந்து தடம் மாறிக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டதால் அந்த விபத்து சம்பவமானது ஏற்பட்டது.
மேலும், அந்த ரயிலின் என்ஜின் வேறு பாதையில் சென்றபோது, பெட்டிகள் தடம் புரண்டு ரயிலில் இருந்து பிரிந்தது. 2009ஆம் ஆண்டில் நடந்த மிகவும் பயங்கரமான சம்பவம் இது. அதே போல இந்த விபத்திலும் இரவு 7.30 மணி முதல் 7.40 மணியளவில் தடம் புரண்ட 13 பெட்டிகளில் ஒன்று மற்றொன்றின் மீது ஏறி இந்த சோகம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு ரத்த தானம் - ஒடிசா தலைமைச் செயலாளர் பாராட்டு!