டெல்லி: ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டம், சுரானா கிராமத்தைச்சேர்ந்த பட்டியலின சமூகத்தைச்சேர்ந்த 9 வயது மாணவன், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான். கடந்த ஜூலை 20ஆம் தேதி, பள்ளியில் இருந்த குடிநீர் பானையில் தண்ணீர் குடித்ததற்காக, ஆசிரியர் சைல் சிங் மாணவனை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக கொலை, பட்டியலின வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் சைல் சிங்கை கைது செய்தனர். இதுதொடர்பாக மாநில கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பட்டியல் இன சமூகத்தைச்சேர்ந்த மாணவன் இறப்புக்குக்காரணமானவர்கள் மீது ராஜஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஜலோர் மாவட்ட ஆட்சியருக்கு ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், இந்த சம்பவம் மிகவும் தீவிரமானது என்றும், இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஏழு நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சார்வாக்கர், திப்பு சுல்தான் பேனர் சர்ச்சை... சிவமூகாவில் 144 அமல்