அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370க்கு முதலில் பாஜக நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி எதிர்ப்பு தெரிவித்தார்.
அதன் பின்னர் அது சட்டமாக்கப்பட்டபோது அதற்கு ஆதரவு தெரிவித்தார். 1942இல் அண்ணல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடர்ந்த போது, சியாமா பிரசாத் முகர்ஜி ஆங்கிலேயர்களுக்கு கடிதம் ஒன்று எழுதினார். அந்தக் கடிதத்தில் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடும் காங்கிரஸாரை பிடித்து சிறையில் போடுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆங்கிலேயரின் ஆதரவாளர்கள்: இது வரலாற்று உண்மை. பிரிட்டிஷாருக்கு எதிராக காங்கிரஸ் சுதந்திர போராட்டம் நடத்தியபோது ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து மகாசபா மற்றும் வீர சாவர்க்கரின் இந்துத்துவா வகையறாக்கள் ஆங்கிலேயருக்கு ஆதரவாக பக்க பலமாக நின்றனர்” என்றார்.
தொடர்ந்து மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டிய திக்விஜய் சிங், “பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது. சர்வதேச அளவில் பணத்தின் மதிப்பு குறைந்துவருகிறது.
காங்கிரஸ், பாஜக ஆட்சி ஒப்பீடு: சமூகத்தில் வன்முறை, வெறுப்பு பரப்பப்படுகிறது. அமைதியற்ற சூழல் நிலவுகிறது. அப்பாவிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. நாட்டில் மத ரீதியான வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து, “பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் குறித்து காங்கிரஸிற்கு கவலை இல்லை” என்றார்.
இது குறித்து திக் விஜய் சிங் கூறுகையில், “நாட்டில் ஏழைகள் மிகவும் ஏழைகள் ஆகிவருகின்றனர். மில்லினியர்கள் (லட்சாதிபதிகள்) பில்லினியர்கள் (கோடீஸ்வரர்கள்) ஆகின்றனர். நாட்டில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சி ஆட்சியின்போது, 10-15 கோடி மக்கள் வறுமை கோட்டில் இருந்து வெளியே வந்தனர். தற்போது அவர்கள் மீண்டும் வறுமைக் கோட்டுக்குள் அகப்பட்டுள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க : பிரிவினையின் முதல் கட்டுரையை வெளியிட்டவர் வீர சாவர்க்கர்- நரேந்திர மோடிக்கு திக்விஜய் சிங் பதிலடி!