நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நகரில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பன்றிக்காய்ச்சலால் மொத்தம் 10 பேர் இறந்துள்ளனர். இந்தியா முழுவதும் மக்கள் ஏற்கெனவே கரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், பன்றிக்காய்ச்சலால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சுகாதாரத்துறையின் புள்ளிவிவரங்களின்படி, நாக்பூர் நகரத்திற்குள் 129 பேரும், கிராமப்புறங்களில் 82 பேரும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நகரில் 211 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது, நாக்பூரில் 42 நோயாளிகளும், கிராமப்புறங்களில் 57 நோயாளிகளும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் நான்கு பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் அதிக ஆபத்தைத் தவிர்க்க முடியும் என சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, அவர்கள் தங்கள் உடல்நிலை குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு வாரமும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், பன்றிக்காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அளவுகள் குறித்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். சோப்பு போட்டு கைகளைக் கழுவவும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சிறுமி டான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை...10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் 8 மணி நேர சிகிச்சை....