பாட்னா: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவானதையடுத்து, அவரது இடத்துக்கு நடைபெறும் மாநிலங்களவை இடைத்தேர்தலில் பாஜக மூத்தத் தலைவர் சுஷில் குமார் மோடி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் சுஷில் குமார் மோடி இன்று (டிச.2) வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுஷில் குமார் மோடி, “ தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்தார்.
சுஷில் வேட்புமனு தாக்கலின்போது, ஜிதன் ராம் மஞ்சி, அமைச்சர் முகேஷ் சஹ்னி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர். மாநிலங்களவை இடைத்தேர்தல் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறுகிறது.
முன்னதாக பாஸ்வான் இடத்துக்கு அவரது மனைவி ரீனா பாஸ்வானை நிறுத்த எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்தது. இந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த பாஸ்வான் மகன் சிராக், “தனது அம்மாவுக்கு தேர்தலில் நிற்க விருப்பம் இல்லை” என்று தெரிவித்துவிட்டார்.
அண்மையில் நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.
நிதிஷ் குமார் முதலமைச்சராக தொடர்கிறார். நிதிஷ் குமார் ஆட்சியில் பல ஆண்டுகள் துணை முதலமைச்சராக இருந்தவர் சுஷில் குமார் மோடி. இனி வரும் காலங்களில் அவர் தேசிய அரசியலில் பயணிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிகாரில் பாஜக கூட்டணி ஆட்சி கவிழுமா?