வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், அதன் அருகே உள்ள ஞானவாபி மசூதிக்கும் இடையே சுற்றுச்சுவர் ஒன்று உள்ளது. இந்த சுவற்றில் சிங்கார கெளரி அம்மன் உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிலைகள் அமைந்துள்ளன. கடந்த 1991ஆம் ஆண்டு முதல், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சிங்கார கெளரி அம்மனுக்கு பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிங்கார கெளரி அம்மனுக்கு தினந்தோறும் பூஜை நடத்த அனுமதி அளிக்கக்கோரி, டெல்லியைச் சேர்ந்த பெண்கள் சிலர் கடந்த 2021ஆம் ஆண்டு, வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சிங்கார கெளரி அம்மன் கோயிலின் அமைப்பு குறித்து வீடியோ பதிவுகளுடன் கள ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்காக, மூத்த வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ரா தலைமையில், இந்து, முஸ்லீம் வழக்கறிஞர்கள் அடங்கிய நீதிமன்றக் குழுவை அமைத்தது. இந்தக் குழு கடந்த 6ஆம் தேதி மசூதி வளாகத்தில் கள ஆய்வை தொடங்கியது. பின்னர், மசூதிக்கு உள்ளேயும் கள ஆய்வு நடத்துவதற்காக நீதிமன்றக் குழுவினர் சென்றபோது, இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நீதிமன்றக்குழு திரும்பி சென்றது. இதுதொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கள ஆய்வை 17ஆம் தேதிக்குள் நடத்தி முடித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கள ஆய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.
அதேநேரம் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற மசூதி நிர்வாகத்தின் கோரிக்கை ஏற்றது. இந்நிலையில் நீதிமன்றக்குழு ஞானவாபி மசூதியில் நேற்று (மே14) மீண்டும் கள ஆய்வை தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கள ஆய்வு நடைபெற்று வருகிறது.
வீடியோ பதிவுடன் கள ஆய்வு நடந்து வருவதாகவும், எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக ஆய்வு நடந்து வருவதாகவும் ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர். இந்த ஆய்வு நாளை (திங்கள்கிழமை) நிறைவடைந்து, 17ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.