புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு இன்று துவங்கியது. இந்த ஒளிபரப்பினை webcast.gov.in scindia என்ற இணைய பக்கம் மூலம் பார்க்கலாம்.
உச்ச நீதிமன்றம் மூன்று வெவ்வேறு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்புகிறது. நேரலை 1ல் தலைமை நீதிபதி யு.யு.லலித், வேலை மற்றும் கல்வி பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) 10 சதவீத இடஒதுக்கீட்டின் செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கிறார்.
நேரலை 2ல் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் டெல்லிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நிலவி வரும் சர்ச்சையில் சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விஷயத்தை விசாரிக்கிறார். மேலும், நேரலை 3ல் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு அகில இந்திய பார் தேர்வின் செல்லுபடியை விசாரிக்கின்றனர்.
சமீபத்தில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், பொது மற்றும் அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நேரடியாக ஒளிபரப்பத் தொடங்குமாறும், அனைத்துத் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை நிரந்தரமாகப் பதிவு செய்யுமாறும் இந்திய தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பிற நீதிபதிகளுக்கு கடிதம் எழுதினார்.
EWS ஒதுக்கீடு, ஹிஜாப் தடை, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அதன் 2018 தீர்ப்பின்படி வழக்குகளை நேரடியாக ஒளிபரப்ப அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகவும் இந்திரா ஜெய்சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அனில் அம்பானிக்கு எதிராக நவம்பர் 17ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது: மும்பை உயர்நீதிமன்றம்