டெல்லி: கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில், அதிமுக சார்பில் வேட்பாளராக களமிறங்கிய ஓ.பி.ரவீந்திரநாத் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
ஓ.பி.ரவீந்திரநாத்தின் வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாகவும், அவரை தேனி தொகுதியில் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக்கோரியும் அதே தொகுதியை சேர்ந்த வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், இருதரப்பு வாதங்களுக்கு பிறகு ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த், தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, "வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்ட நாளில் ஆட்சேபனையை பரிசீலிக்க வேண்டிய தேர்தல் அதிகாரி, அதைச் செய்யத் தவறியதால், விளக்கம் அல்லது திருத்தம் இல்லாமல் வேட்புமனுவை ஏற்றுக்கொண்டார் என்பதை இது காட்டுகிறது" என்று கூறினர்.
இதையும் படிங்க: Anbumani Ramadoss: "தேசிய அளவில் மட்டுமே கூட்டணி; தமிழ்நாட்டில் இல்லை" - NDA- கூட்டணி குறித்து மனம் திறந்த அன்புமணி!
ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பி வழக்கறிஞர், கே.கே.வேணுகோபால், "வேட்புமனுவில் தகவல்களை மறைத்த காரணத்தால் மனுதாரர் வெற்றிபெற்றது செல்லாது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தவிர மனுதாரர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார் என கூறவில்லை" என வாதிட்டார்.பின்னர், ஜூலை 6-ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்ட உச்ச நீதிபதிகள், எதிர் மனுதாரர்களான மிலானி, ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கத் தமிழ்செல்வன் ஆகியோருக்கு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்கால தடை உத்தரவால் ஓ.பி.ரவிந்திரநாத்தின் எம்பி பதவி தற்காலிகமாக தப்பியுள்ளது. அதோடு அவர், நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தடையின்றி பங்கேற்கலாம். அதிமுகவில் ஒரே ஒரு மக்களவை உறுப்பினராக உள்ள ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவால் அதிமுக(ஓபிஎஸ் தரப்பு) பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் வருமா? வராதா?.. கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!