டெல்லி : யூனியன் பிரதேசத்தின் நிர்வாக சேவைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உண்டு என்றும், அதன் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
தலைநகர் டெல்லியில் பொது ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்ட துறைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இதனால் பல்வேறு நிர்வாகச் சிக்கல் ஏற்படுவதாகவும், அதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆம் ஆத்மி தலைமையிலான அரசு கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா உள்ளிட்டோர் ஓய்வுபெற்றனர். இருப்பினும் இந்த வழக்கு குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
வழக்கின் இறுதிகட்ட விசாரணை நிறைவுபெற்ற நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை வெளியிட்டனர். டெல்லியின் நிர்வாக சேவைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என்றும், ஆளுநர் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் கூறி நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்த மனுவை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, மற்றும் அசோக் பூஷண் அமர்வு, டெல்லியின் நிர்வாக சேவைகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறினர். மேலும், டெல்லியில் குடிமைப் பணிகள் அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசு மற்றும் துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் இருப்பதாகக் கூறினர்.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு நீதிபதி அசோக் பூஷண் வெளியிட்ட தீர்ப்பில் உடன்பாடு இல்லை என தற்போதைய 5 நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. மக்கள் விருப்பத்தை பிரதி நிதித்துவப்படுத்த சட்டமியற்றும் அதிகாரம் டெல்லி சட்டப்பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கூறினர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தவும், கேள்வி கேட்கவும் அதிகாரம் இல்லை என்றால், அந்த அரசுக்கு சட்டமன்றம் மற்றும் பொதுமக்கள் மீதான பொறுப்பு நீர்த்துப் போகும் என நீதிபதிகள் கூறினர். அதேபோல், மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் துணை நிலை ஆளுநர், நிர்வாக சேவைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகள் மற்றும் அதன் அமைச்சரவை குழுவின் ஆலோசனைகளுக்குக் கட்டுப்பட்டவர் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே தலைநகர் டெல்லியில் ஆளுநருக்கும், அரசுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆம் ஆத்மி அரசுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக இந்த தீர்ப்பு கருதப்படுகிறது.
இதையும் படிங்க : தப்பியது ஏக்நாத் ஷிண்டேவின் CM பதவி - அவசரப்பட்டு கோட்டைவிட்ட உத்தவ் தாக்ரே!