டெல்லி: எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட சட்டம் இயற்றுபவர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி அஷ்வினி உபாதயாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (நவ.9) விசாரணைக்கு வந்தது.
அப்போது எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்கும் வண்ணம், சிறப்பு அமர்வு மற்றும் தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியது. சட்டம் இயற்றபவர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக, அனைத்து விசாரணை நீதிமன்றங்களுக்கும் ஒரே மாதிரியான நெறிமுறைகளை வகுப்பது என்பது கடினமான செயல் ஆகும் என அமர்வு கூறியது.
அது மட்டுமல்லாமல், சட்டம் இயற்றுபவர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளின் விசாரணையைத் தொடர்ந்து கண்காணிக்க தலைமை நீதிபதி அல்லது தலைமை நீதிபதியின் கீழான அமர்வின் கீழான சிறப்பு அமர்வு அமைக்கப்பட வேண்டும். எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளின் விசாரணை நிலையைக் கண்காணிக்க சிறப்பு கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றங்கள் உத்தரவிடலாம் எனவும் உச்ச நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தி உள்ளது.
எம்பி, எம்எல்ஏ மற்றும் எம்எல்சிக்களுக்கு எதிரான வழக்குகளை அரிதான மற்றும் மிகவும் தேவையான காரணங்களுக்காக அன்றி, விசாரணை நீதிமன்றங்கள் ஒத்தி வைக்காது எனவும் உச்ச நீதிமன்றம் பதில் அளித்தது. குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதி, தொழில்நுட்ப வசதி ஆகியவற்றை சிறப்பு நீதிமன்றங்களுக்கு, முதன்மை மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றங்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என அமர்வு உத்தரவிட்டு உள்ளது.
மேலும், குற்றவியல் வழக்குகள் உள்ள அரசியல் பிரமுகர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பது தொடர்பாக வழக்கறிஞர் அஷ்வினி துபே தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, அரசியல்வாதிகளுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் நாட்டில் அமைப்பதாக தெரிவித்தது.
இதையும் படிங்க: தமிழக அரசின் அர்ச்சகர் நியமன அரசாணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!