டெல்லி: கடந்த 2014ஆம் ஆண்டு சமயங்களில் அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த வி. செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து, 30.07.2021-ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, கடந்த ஆண்டு தர்மராஜ் என்பவர் தரப்பில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த தவறியதாக, ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறையினர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி மற்றும் வி. ராமசுப்ரமணியன் கொண்ட சிறப்பு அமர்வு, கடந்த மே மாதம் 16ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, விரிவான விசாரணை மேற்கொள்ள இன்னும் 6 மாதங்கள் அவகாசம் கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு அளித்தது. அந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஸானுதீன் அமானுல்லா தலைமையில் இன்று (ஆகஸ்ட் 08) விசாரணைக்கு வந்தது.
அப்போது, எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என்பதை டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளர், நேரில் வந்து கேட்க வேண்டும் என்றும், 6 மாத அவகாசம் வழங்க முடியாது என்றும், குறைந்த அளவிலான கால அவகாசமே வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். தொடர்ந்து டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளர் ஆஜராக வேண்டிய உத்தரவையும் வாபஸ் பெறுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இதையும் படிங்க: என்.எல்.சி விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமிக்க உயர் நீதிமன்றம் முடிவு!