டெல்லி : உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.3) நடந்த வன்முறை சம்பவத்தில் நான்கு விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய அமைச்சர் ஒருவரின் மகன் காரை ஏற்றியதில் 4 விவசாயிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
லக்கிம்பூர் கேரி விவகாரம் அரசியல் ரீதியாக நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த நேற்று (அக்.6) ஆறுதல் கூறினார்கள்.
இந்நிலையில் உத்தரப் பிரதேசம் சென்ற பஞ்சாப், சத்தீஸ்கர் முதலமைச்சர் ஆகியோர் வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : லக்கிம்பூர் வன்முறை: கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல், பிரியங்கா