டெல்லி : காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் 370 சட்டப்பிரிவை நீக்க சாத்தியமா என்று கேள்வி எழுப்பியது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தனர். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின் விசாரணையானது, ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் நாள்தோறும் நடத்தப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் விசாரிக்கப்பட உள்ள நிலையில் திங்கள் மற்றும் வெள்ளி தவிர மற்ற நாட்களில் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப் பிரிவு அரசியல் சட்டத்தின் மூலமாகவே நீக்கப்பட்டதாகவும் அரசியலமைப்பு நடைமுறையின் கீழ் நீக்கப்படவில்லை என்று தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில், அதற்கான அரசாணையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்க மசோதாவை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370வது ரத்து செய்வதில் குடியரசுத் தலைவரின் பங்கு இருப்பதையும் சட்டப்பிரிவு ரத்திற்கான நோக்கத்தின் வரலாற்றையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் தெரிவித்தார்.
ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் ஜம்மு காஷ்மீருக்கு வழக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370வது சட்டப் பிரிவை ரத்து செய்ய விரும்பினால், அதற்கு சாத்தியம் இல்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு இல்லாமல் போன பிறகு 370வது சட்டப்பிரிவு நிரந்தரமாகிறது என்பதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சட்டப்பிரிவு மீதான வாதம் தொடரும் என்று தலைமை நீதிபதி கூறினார்.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபபை வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு அதிகாரத்தை கொண்டு இருக்க முடியுமா என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், 1957க்குப் பிறகு 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய முடியாதா என்றும் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் பதவிக்காலம் முடிந்த பிறகும், 370வது பிரிவின் பிரிவு 3 தொடர்ந்து செயல்படுமா என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
1950 முதல் 1957 வரை மட்டுமே அசியலமைப்பு நிர்ணய சபை செயல்பட்டதாக கூறப்படும் நிலையில், எந்தவொரு அரசியலமைப்பு நிர்ண சபையும் காலவரையற்ற ஆயுட்காலத்தை கொண்டு இருக்க முடியாதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க : குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு.. பிரதமர் மணிப்பூர் செல்ல வலியுறுத்தல்!