டெல்லி: இந்தியாவின் அதி முக்கியத் தொழிலதிபர்களுள் ஒருவராக இருப்பவர், அதானி. இவரது தலைமையிலான அதானி குழுமம், குஜராத்தின் தலைநகரான அகமதாபாத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் எரிசக்தி, துறைமுகம், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த தொழில்களில் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் தொழில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், விரிவுவடுத்தப்பட்டு நடைபெற்று வரும் இந்நிறுவனத்தில், ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வரை பரிவர்த்தனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், கடந்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டது.
அதில், பல ஆண்டுகளாக அதானி குடும்பம் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அதிக அளவில் அக்குழுமத்திற்கு கடன் இருப்பதாகவும், பண மோசடி மற்றும் கணக்குகளில் முறைகேடு செய்து நிறுவனக் கடன்களை பெருமளவு மறைத்து இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து, பங்குச்சந்தையில் அதானி குழுமம் பெரும் சரிவைச் சந்தித்தது.
மேலும், அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு அறிக்கையின் உண்மைத் தன்மையினை விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர், இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதானி குழுமம் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்றம் செபிக்கு (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) உத்தரவிட்டது.
மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி அபய் மனோகர் சப்ரே தலைமையில் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து, அதில் செபியின் விதிமுறைகள் பற்றியும், பங்குச் சந்தை கட்டமைப்பு குறித்த வழிமுறைகளை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டது. அதன்படி, இக்குழுவானது கடந்த மே மாதம் தனது அறிக்கையினை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதையடுத்து, ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டு ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும், செபி இந்த வழக்கை முடிக்காததால், வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என பலதரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜன.03) நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா மற்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், “ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான அதானி குழும முறைகேடு வழக்கில், எந்தவொரு சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி அல்லது சிபிஐ) விசாரணையும் தேவையில்லை. செபியின் விசாரணை மட்டுமே போதுமானது.
குறிப்பிட்ட அளவே, செபியின் அதிகாரத்திற்குள் உச்ச நீதிமன்றத்தால் தலையிட முடியும். மேலும், இந்த விவகாரத்தில் எழுந்த 24 புகார்களில் 22 வழக்குகளை செபி முடித்துள்ள நிலையில், நிலுவையில் உள்ள 2 வழக்குகளின் விசாரணையையும், 3 மாதத்திற்குள் செபி முடிக்க வேண்டும். இந்த வழக்கில் குறுகிய நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து தீர்ப்பு வழங்க முடியாது. எனவே, அதானி குழும விவகாரத்தை செபி அமைப்பே விசாரிக்கும்” எனக் கூறி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட் முதலமைச்சருக்கு நெருக்கமானவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!