டெல்லி : ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப் பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் ஆகஸ்ட் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ஜூலை 11ஆம் தேதி மனுக்கள் குறித்து நீதிபதிகள் விசாரிக்க இருந்த நிலையில் தற்போது தேதி குறிப்பிடப்படாமல் அகஸ்ட் மாதத்திற்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370வது சட்டப் பிரிவை மத்திய அரசு நீக்கியது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
370-வது சட்டப்பிரிவு ரத்துக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை 7 நீதிபதிகள் கொண்ட மிகப்பெரிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரி சில தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
ஆனால் இந்த வழக்குகளை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற மறுத்து விட்ட உச்ச நீதிமன்றம், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரிக்கும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 370வது சட்டப்பிரிவு ரத்துக்கான எதிரான மனுக்கள் விசாரிக்கப்படாமல் இருந்தன.
இந்த நிலையில் ஜூலை 11ஆம் தேதி முதல் 370வது சட்டப் பிரிவு ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர். சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் தாக்கல் செய்த மனுவை நீதிபதி பி.ஆர்.கவாய் விசாரித்துக் கொண்டிருந்த போது, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அவரது மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு பரிந்துரைத்தார்.
இதையடுத்து நீதிபதி கவாய், ஆகஸ்ட் மாதம் 370வது சட்டப்பிரிவு ரத்து தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என்று கூறினார். ஆகஸ்ட் மாதம் 370வது சட்டப் பிரிவு ரத்துக்கு எதிரான மனு மீதான விசாரணை தொடங்க உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : அடுத்த டார்கெட் முதலமைச்சர்... அஜித் பவார் ஓபன் டாக்... சரத் பவார் ஓய்வு பெற அறிவுறுத்தல்!