டெல்லி: அமைச்சர் பொன்முடி 1996 - 2001ஆம் ஆண்டில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது கடந்த 2002ஆம் ஆண்டு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரணை செய்து வந்தது. இந்த வழக்கில் இதுவரை 169 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து (suo motu case) விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றியதில் தவறு நடந்துள்ளதாகவும், இந்த வழக்கில் 4 நாட்களில் 226 பக்கம் கொண்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது எனவும் நீதிபதி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணை செய்ய வேண்டும் என அமைச்சர் பொன்முடி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிலையில் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை செய்யத் தடை கோாி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தன் மீதான வழக்கை தாமாக முன்வந்து மறு விசாரணை செய்வதை எதிர்த்து அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமைச்சர் பொன்முடியின் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்றவர்கள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதையும் படிங்க: கேரள மதவழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு சம்பவம்: பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு!