டெல்லி : தமிழ்நாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்புடைய ஆடியோ விவாகரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு குறித்து முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியாகி வைரலானது. இந்த ஆடியோ தொடர்பாக உண்மைத் தன்மையை கண்டறிய உத்தரவிடக் கோரி பிரனேஷ் ராஜமாணிக்கம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 30 ஆயிரம் கோடி ரூபாய் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் இந்த விவகாரம் குறித்து உள்ளூர் போலீசார் விசாரிக்காமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையில் நீதிபடிகள் ஜே.பி. பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றம் அரசியல் தளம் இல்லை என்றும் இது போலியான மனு என்றும் தெரிவித்தனர்.
மேலும், குற்றவியல் நடைமுறை சட்ட விதிகளின்படி போதுமான நடவடிக்கை எடுக்க, இந்திய அரசியலமைப்பு சட்டம் வழிவகை செய்திருக்கிறது என்றும் நீதிமன்றத்தை அரசியல் விவாத மேடையாக மாற்ற அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து... பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு!