டெல்லி: உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானியில், ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து குடியிருக்கும் 50 ஆயிரம் பேரை வெளியேற்ற அனுமதித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஹல்த்வானி ரயில் நிலையத்தை அடுத்த ரயில்வே நிர்வாகத்திற்குச் சொந்தமான ஏறத்தாழ 29 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 4 ஆயிரம் குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் எனக் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் வசித்து வரும் நிலையில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்ததாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து தங்கியிருக்கும் 50ஆயிரம் பேரை வரும் ஜனவரி 9ஆம் தேதிக்குள் வெளியேறுமாறும், மறுப்பவர்களை வெளியேற்ற போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினரை பயன்படுத்த அனுமதி அளித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஒரே நாள் இரவில் 50ஆயிரம் பேரை வெளியேற்றுவது என்பது மனிதாபிமானம் அற்றச் செயல் என நீதிபதிகள் கூறினர்.
50ஆயிரம் பேரை வெளியேற்ற துணை ராணுவத்தை பயன்படுத்த அனுமதி அளித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முறையற்றது எனக் கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். மேலும் வழக்குத் தொடர்பாக மாநில அரசு மற்றும் ரயில்வே நிர்வாகம் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: அஞ்சலி இறப்பில் தொடரும் மர்மம்: வழக்கில் 7 பேருக்கு தொடர்பு என போலீஸ் பகீர் தகவல்!