டெல்லி: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, ஓட்டுநர், நடத்துனர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டதாக, அவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த மோசடியின் மூலமாக சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையும் கடந்த 2021ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த சம்மனை எதிர்த்து செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை கடந்த 1ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என்று தெரிவித்து அமைச்சர் செந்தில்பாலாஜி சார்பில் வழக்கறிஞர் ராம்சங்கர் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனிடையே மற்றொரு விவகாரத்தில் பொறியாளா் பிரிவில் பாதிக்கப்பட்ட காவலர்கள் தரப்பு சாட்சியாக இருந்த தா்மராஜ் என்பவா் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மெக்கானிக்கல் பொறியாளரான தா்மராஜுக்கு உரிய தகுதியிருந்தும் சென்னை, மெட்ரோ போக்குவரத்து நிறுவனத்தில் வேலைகிடைக்காமல் போனதாகவும், தகுதியற்ற நபா்களுக்கு பணம் பெற்று பணி வழங்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமா்வு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் தாக்கலான மனுவும் அந்த வழக்குடன் சோ்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், வி.ராம சுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று (செப் 8) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மின்துறை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கை முடித்து வைத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. மேலும், பணமோசடி வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த தீர்ப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எம்பியின் பிஏ எனக்கூறி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சுற்றிய நபர் கைது