டெல்லி: சசி தரூர் வசித்துவந்த வீட்டைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்றுவந்த காரணத்தால் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சசி தரூர், அவரது மனைவி சுனந்தா புஷ்கர் ஆகியோர் டெல்லியிலுள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். எதிர்பாராதவிதமாக சுனந்த புஷ்கர் 2014 ஜனவரி 17ஆம் தேதி விடுதியின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் சசி தரூருக்குத் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகித்த காவல் துறையினர் அவர் மீது, மனைவியைக் கொடுமைக்குள்படுத்துதல், தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில், சசி தரூர் மீது குற்றச்சாட்டைப் பதிவுசெய்வது தொடர்பான வழக்கு நேற்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிதரூர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் விகாஸ் பாவா, "சுனந்தா புஷ்கர் மரண விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளிலும் சசி தரூர் குற்றவாளி என்ற ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அவர் தண்டனைக்கு உரியவர் என நிரூபிக்கும் ஆதாரங்களும் இல்லை. எனவே, இந்த மரண வழக்கிலிருந்து சசி தரூரை விடுவிக்க வேண்டும்" என்றார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல், சுனந்தா புஷ்கர் மரண வழக்குத் தொடர்பாக சசி தரூர் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யும் நடவடிக்கையை ஏப்ரல் 29ஆம் தேதிவரை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.