ஹைதராபாத்: பிளேக், நிமோனியா போன்ற நோய்களின் வரிசையில் பல்வேறு பாதிப்புகளுடன் உலகையே அச்சுறுத்தியது கரோனா பெருந்தொற்று. இந்த கொடிய நோய்க்கு உலகம் முழுவதும் சுமார் 7 கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில் சுமார் 70 லட்சம் உயிரிழந்தனர். பல நாடுகளில் இன்னுமும் இந்த கரோனா பெருந்தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது.
வரும் காலங்களில் கரோனா பாதிப்பில் இருந்து உயிர் தப்பியவர்கள் மற்ற நோய்களில் அதிகம் பாதிப்படைவார்கள் என்றும் குறிப்பாக இருதயம் சார்ந்த பிரச்சனைகளில் சிக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில், கரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களிடம் தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம், சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவப் பிரிவுத் துறை இணைந்து நடத்திய ஆய்வில் பலர் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் தெரியவந்துள்ளது.
அதில், கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலக் கட்டமான 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரை கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட ஆயிரத்து 220 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 73 பேர் அதாவது 6 விழுக்காடு நபர்கள் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளால் உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது.
இது குறித்து, ஆய்வில் ஈடுபட்ட ஒருவர் கூறுகையில், "இந்த ஆய்வு கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பிந்தைய ஆரோக்கியத்தைப் பற்றிய தகவல்களுக்காக மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அனைத்து வயதினரையும் ஒருங்கிணைத்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
கரோனாவிற்கு பின் மற்ற நோய்களால் பாதிப்படைவர்களின் விகிதம் வயதுக்கு தகுந்தாற்போல் மாற்றம் கொள்கிறது. இந்த பதற்றம் குழந்தைகளில் மிகக்குறைவாகவே இருக்கின்றது. ஆய்வின் படி, கரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட 60 விழுக்காடு நபர்களில், 41 விழுக்காடு நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 15.5 நபர்கள் நீரிழிவு(சர்க்கரை) நோயாலும், 13.6 விழுக்காடு நபர்கள் ஹைபர் டென்ஷன்(BP) நோயாலும் முன்னதாக பாதிக்கப்பட்டிருந்தனர். இதைத் தவிர்த்து, புற்றுநோய், இதய செயலிழப்பு, தற்காலிகமாகவோ அல்லது நிரந்திரமாகவோ ரத்த ஒட்டம் இல்லாமல் தொடை எலும்பில் ஏற்படும் அவஸ்குலர் நெக்ரோசிஸ் போன்ற நோய்களினாலும் கணிசமாக பாதிப்படைகின்றனர். இந்த அவஸ்குலர் நெக்ரோசிஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களில் 87 விழுக்காடு நபர்கள் கரோனா நோயால் பாதிப்படைந்தவர்கள். அதேபோல், பசியின்மை மற்றும் நிலையான சோர்வே இவர்களில் பொதுவாக கண்டறியப்படும் அறிகுறிகள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேங்கி நிற்கும் மழை நீரால் வரும் கண் நோய்; இலவச பரிசோதனையை அறிவித்த டாக்டர் அகர்வால் மருத்துவமனை!