புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி (SAFAR) வெளியிட்டுள்ள தகவலின்படி, "டெல்லியைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் எரிக்கப்படும் பண்ணைக் கழிவுகளால் டெல்லி, தேசிய தலைநகர் பகுதிகளில் தொடர்ந்து காற்றின் தரம் குறைந்துவருகிறது.
கடந்த சனிக்கிழமை (அக். 31) மட்டும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மூன்றாயிரத்து 216 பண்ணைக் கழிவு எரிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் காற்றின் தரம் மேலும் 40 விழுக்காடு குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த இரு தினங்களில் காற்றின் தரம் ஓரளவு முன்னேறிய தன்மையுடனே உள்ளதாகத் தெரிகிறது.
செயற்கைக்கோள் வெளியிட்டுள்ள படத்தின் அடிப்படையில், அதிகளவு பண்ணை கழிவுகள் எரிப்பு நடந்துவருவது தெரிகிறது. மேலும், குளிர்காலம் காரணமாகவும் டெல்லியில் காற்றின் தரம் குறைந்து வானத்தில் மூடுபனி நீடித்துவருகிறது" எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பசுமைக் கழிவுகளால் தேசிய தலைநகர் பகுதிகளில் 40 விழுக்காடு காற்று மாசு அதிகரித்துள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் 'ரெட் லைட் ஆன், காடி ஆஃப்' என்ற பரப்புரையைத் தொடங்கிவைத்து பேசிய அமைச்சர் ராய், “காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தனி ஒரு மாநிலத்தின் நடவடிக்கை போதுமானதாக இருக்காது. இதற்கு கூட்டு நடவடிக்கை தேவை. மாசுக் கட்டுப்பாட்டை டெல்லி அரசால் உறுதிசெய்ய முடியும். ஆனால் இதற்கு அது மட்டும் போதாது” என்றார்.
இதையும் படிங்க....பட்டாசுகளை தடை செய்யலாமா...வேண்டாமா? - கருத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தேசிய பசுமைத் தீர்ப்பாயம்