டெல்லி: இந்திய- ஆஸ்திரேலிய பொருளாதார கருத்தரங்களில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "கரோனாவிற்கு பிந்தைய பொருளாதாரத்தை மீட்க இந்திய-ஆஸ்திரேலிய நாடுகளின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
நுகர்வு சார்ந்த பொருளாதார மாதிரிகள் இந்த புவிப்பரப்பின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இயற்கை நமக்கு வழங்கிவரும் அனைத்திற்கும் நாம் உரிமையாளர் அல்ல என்பதை மறந்துவிடக் கூடாது. நம்மைத் தொடர்ந்து வருங்கால சந்ததியினர் அனைவருக்கும் அவை அறங்காவலர்களே.
திறமையுடனும், குறைந்த மாசுபடுதலுடனும் உற்பத்தியாளர் தங்களது உற்பத்திகளை உருவாக்கவேண்டும். இதுதொடர்பாக நாம் சரியான திசையை அமைக்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்கத்தை எவ்வாறு குறைக்க இயலும் என்பதைக் கருத்தில் கொண்டே நமது படைப்புகள் இருக்கவேண்டும்.
பொருட்களை மறுசுழற்சி செய்தல், மறுபயன்பாட்டிற்கு ஈடுபடுத்துதல், கழிவுகளை அகற்றுதல் போன்றவை நமது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.
கண்டுபிடிப்புகள் இரு நாடுகளையும் பொருளாதார ரீதியில் முன்னிலை வகிக்க ஊக்குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்கான வழிகள் ஆராயப்பட வேண்டும். வளங்களை வீணாக்குவதற்குப் பதிலாக புதிய தயாரிப்புகளையும் பயன்பாடுகளையும் உருவாக்க உற்பத்திச் சுழற்சியில் கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும். இளைஞர்களின் ஆற்றலும் உற்சாகமும் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான கூட்டாட்சியின் அடையாளம்" என்றார்.