பனாஜி : கோவா டபோலிம் விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த விமானம் ஓடுபாதையில் நாய் இருந்ததால் மீண்டும் பெங்களூருவுக்கே திருப்பி விடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையத்தில் இருந்து கோவா டபோலிம் விமான நிலையத்திற்கு விஸ்தாரா நிறுவனத்தின் Flight UK881 என்ற விமானம் சென்றது. கோவா டபோலிம் விமான நிலையத்தில் விஸ்தாரா விமானம் தரையிறங்க இருந்த நிலையில், ஓடுதளத்தில் நாய் இருந்ததை விமான நிலைய கட்டுப்பட்டு அதிகாரிகள் கவனித்து உள்ளனர்.
விஸ்தாரா விமானிக்கு இதுகுறித்து தகவல் கொடுத்த விமான நிலைய கட்டுபாட்டு அதிகாரிகள், ஓடுதளத்தில் தரையிறக்க வேண்டாம் என அறிவுறுத்தினர். இதையடுத்து விமானம் மீண்டும் பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. மதியம் 12.55 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மதியம் 3.05 மணிக்கு மீண்டும் அதே விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
தொடர்ந்து 4.55 மணிக்கு மீண்டும் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டு 6.15 மணிக்கு கோவா டபோலிம் விமான நிலையத்திற்கு விமானம் சென்றடைந்தது. ஓடுபாதையில் புகுந்த நாயினால் ஏறத்தாழ 5 மணி நேரம் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். விமான ஓடுபாதைக்குள் நாய் எப்படி புகுந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வர்த்தக விமான நிலையமாக திகழும் கோவா டபோலிம் விமான நிலையம், இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் விமான தளத்தின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கேரளாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு! மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!