புதுச்சேரி: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதையடுத்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகப் பகுதிகளில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சூறைக்காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடும் வகையில், இந்த மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலில் 45 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக, புதுச்சேரி தேங்காய் திட்டு துறைமுகம் மற்றும் வீராம்பட்டினம், நலவாடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.