பாட்னா: பீகார் முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது நேற்று (ஆக. 21) தாக்குதல் நடந்துள்ளது. இதில், இரண்டு கார்களை பெரிய கற்களை கொண்டு உடைத்தும், கம்புகளை கொண்டு உடைத்தும் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவம், காயா நகரின் சோகி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. காயா நகருக்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் இன்று (ஆக. 22) வருகை தருவதை முன்னிட்டு, அவரின் பாதுகாப்புக்கு வாகனங்கள் அணி வகுப்பு செய்வது வழக்கம். அதன்படி, தலைநகர் பாட்னாவில் இருந்து காயா நோக்கி வந்த வாகனங்கள் மீது இந்த கல்லெறி தாக்குதல் நடந்துள்ளது.
அந்த அணிவகுப்பு வாகனத்தில் நிதீஷ் குமார் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக்கூறி 13 பேரை பீகார் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதை பாட்னா சிறப்பு காவல் கண்காணிப்பாளர் இன்று (ஆக. 22) உறுதி செய்தார்.
காயா நகரில் நடைபெற்று வரும் ரப்பர் அணை திட்டப்பணிகளை பார்வையிட வரும் நிதீஷ் குமார், அப்பகுதியில் நிலவும் வறட்சி குறித்தும் ஆய்வு செய்ய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் வருகைக்கு ஒருநாள் முன்னர்,அவரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது இத்தகையை தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், பீகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிதீஷ், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவற்றுடன் புதிய ஆட்சியை அமைத்தது நினைவுக்கூரத்தக்கது.
இதையும் படிங்க: வரலாற்றில் ஒருமுறை மட்டுமே நிகழ்ந்த அசாதாரண சம்பவம்... தன்னை தானே கைது செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு வரலாற்று நாயகன்...