கர்நாடகா: கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் மே மாதம் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. இதனால் பொதுமக்களை கவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இட ஒதுக்கீட்டில் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்தது. கடந்த மார்ச் 24ஆம் தேதி, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை, லிங்காயத் மற்றும் ஒக்கலிகர் சமூகங்களுக்கு தலா 2 சதவீதம் என்று பிரித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஒக்கலிகர், லிங்காயத் சமூகத்தினருக்கு கூடுதலாக 2 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும்.
இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டாலும், அதற்குப் பதிலாக அவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படுவார்கள் என்றும், அதன் மூலம் அவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில், அதன் சிறிய சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த இட ஒதுக்கீடு மாற்றங்களுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அளிக்க பஞ்சரா மற்றும் போவி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உள் ஒதுக்கீட்டால் தங்களுக்கான இட ஒதுக்கீடு குறையும் என்றும், இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது அநீதி என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த இட ஒதுக்கீடு மாற்றத்தைக் கண்டித்து இன்று(மார்ச்.27) கர்நாடக மாநிலம், ஷிவமோகா மாவட்டத்தில், பஞ்சரா மற்றும் போவி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பேரணியாக சென்று தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர். பின்னர், அந்த அலுவலகத்திற்கு அருகே உள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் அலுவலகம் மற்றும் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. அப்போது வீட்டில் யாரும் இல்லை எனத் தெரிகிறது.
கற்களை வீசித் தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், போலீசாரின் தடுப்புகளையும் தாண்டி போராட்டக்காரர்கள் வீட்டின் மீது கற்களை வீசினர். கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் சிலர் காயமடைந்ததாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு இல்லத்தை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்