உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரில் உள்ள புஷப் விஹார் காலனியைச் சேர்ந்தவர், நீலம். இவரது முதல் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். எனவே நீலம், பிரேம்வீர் என்பவரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதேநேரம் பிரேம்வீரை திருமணம் செய்வதற்கு முன்பாகவே ராஜூ (10) என்ற மகன் இருந்தார்.
எனவே மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் வீட்டில் உள்ள இரட்டை படுக்கையில் ராஜூ தூங்க விரும்பியுள்ளார். இதற்கு பிரேம்வீர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரேம்வீர், தனது வளர்ப்பு மகனை கம்பால் அடித்துக் கொன்றுள்ளார்.
பின்னர் பிரேம்வீர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுவனின் உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தப்பி ஓடிய பிரேம்வீரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தின்போது சிறுவனின் தாயும் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை... 74 வயது முதியவருக்கு 16 ஆண்டுகள் சிறை...