அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களிலும் காவலர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் நாகாலாந்தில் மட்டும் ஒதுக்கப்பட்டதை விட 1,375 காவலர்கள் கூடுதலாக பணியாற்றிவருகின்றனர் என காவல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முகமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான புள்ளிவிவரத்தில், "நாகாலாந்தில் ஒதுக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 738 ஆகும். ஆனால், அங்கு 28 ஆயிரத்து 113 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மாவட்ட ஆயுத ரிசர்வ் படை, சிவில் போலீஸ், மாநில ஆயுத படை, இந்திய ரிசர்வ் பட்டாலியன் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. பெண் காவலர்களின் எண்ணிக்கை அனைத்து மாநிலங்களில் குறைவாகவே உள்ளது. ஆந்திரப்பிரதேசத்தில் 59 ஆயிரத்து 553 மாநில காவல்துறையினர் மட்டுமே பணியாற்றிவருகின்றனர். அங்கு 73 ஆயிரத்து 894 மாநில காவல்துறையினர் பணியிடங்கள் உள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 865 மாநில காவல் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. மேற்குவங்கத்தில் 55 ஆயிரத்து 294 காவல் பணியிடங்களும் பிகாரில் 47 ஆயிரத்து 099 காவல் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. மற்ற மாநிலங்களை விட, மகாராஷ்டிரா, பிகார் ஆகிய மாநிலங்களில் அதிக பெண் காவலர்கள் பணியாற்றிவருகின்றனர்.