டெல்லி: இலங்கையில் தொடர்ந்து வரும் பொருளாதாரச் சரிவின் காரணமாக, அந்நாட்டின் உணவுக்கொள்முதல், மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக இந்தியாவிடம் 1 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தொகையை கடன் வாங்கியுள்ளது. அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ. 7,593.82 கோடி.
இந்த கடன் தொடர்பான ஒப்புதல் ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியாவிற்கும் இலங்கை அரசிற்கும் நடுவே நடைபெற்றுள்ளது.
இந்த ஒப்புதல் நிகழ்வு, இந்திய ஒன்றிய பொருளாதாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கையின் பொருளாதாரத்துறை அமைச்சர் பசில் ராஜபக் ஷே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில் இன்று(மார்ச் 17) நடைபெற்றது. இந்த அமர்வில், அமைச்சர்கள் பொருளாதார ஒத்துழைப்பு சார்ந்த விவகாரங்களைப் பற்றியும்; இதன் மூலம் உள்ள இருநாடுகளின் பரஸ்பர நலன்கள் குறித்தும் விவாதித்ததாகத் தெரிகிறது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை ராஜபக் ஷே நேற்று(மார்ச் 16) சந்தித்து, இந்தியாவின் பொருளாதார உதவிக்கு நன்றி தெரிவித்ததையடுத்து, இந்த ஒப்பந்தம் இன்று (மார்ச் 17) நடந்தேறியுள்ளது.
அப்போது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, வளர்ச்சி போன்ற கோட்பாடுகளில் இலங்கை முக்கியப் பங்கு வகிப்பதால் அவர்களோடு துணை நிற்பது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சஸ்பென்ஸ் உடைத்த பகவந்த் மாண்: ஊழலுக்கு எதிராக நடவடிக்கை!