டெல்லி: உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகள் குறித்த ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் யுனிசெஃப் அமைப்பு #GoBlue lights #ForEveryChild என்னும் பரப்புரையை மேற்கொண்டுள்ளது. இந்த பரப்புரையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், யுனிசெஃப் அமைப்பின் தெற்காசியா தூதருமான சச்சின் டெண்டுல்கர், பிரபல பாலிவுட் நட்சத்திரமும், யுனிசெஃப் உறுப்பினருமான ஆயுஷ்மான் குர்ரானா மற்றும் கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ் இணைந்தனர். இதற்கு ஆதரவளிக்கும் விதமாக நாட்டின் பழமையும் புகழும் பெற்ற கட்டடங்கள் நீல விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகை, நாடாளுமன்ற கட்டடம், பிரதமர் அலுவலகம், குதுப்மினார் நினைவுச்சின்னம், இந்தியா கேட், மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம், கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பாலம், மேற்கு வங்க சட்டப்பேரவை கட்டடம், அகமதாபாத் விமான நிலையம் உள்ளிட்ட பல கட்டடங்கள் நீல விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. அதேபோல சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 1,000 கிராமங்களில் உள்ள தெருக்களில் நீல வண்ணம் பூசப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், மருத்துவம் உள்ளிட்ட கருத்துகள் பரப்புரை செய்யப்பட்டன.
இதுகுறித்து யுனிசெஃப் இந்தியாவின் பிரதிநிதி சிந்தியா மெக்காஃப்ரி கூறுகையில், “உலக குழந்தைகள் தினம் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் பாதுகாப்பு, சம உரிமை, கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவம் உள்ளிட்டவையை வழங்க வேண்டிய கடமையை மீண்டும் நினைவுறுத்தும் நாளாகும். அதேபோல பெண் குழந்தைகளிடையே பாலின பாகுபாட்டை விரட்டுவதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. யுனிசெஃப் இந்தியா, குழந்தைகளுக்கான திட்டங்களையும், பரப்புரைகளையும், ஆதரவுகளையும் வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை செய்துள்ளது.
இந்த வாரம் குழந்தைகளுக்கான வாரமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் ஊடகங்கள் மூலம் பரப்புரை மேற்கொண்டோம். ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உடன் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நேர்காணல் நடத்தினோம். குஜராத், கர்நாடகாவில் 'வளர்ச்சிக்கான விளையாட்டு' என்ற தலைப்பில் குழந்தைகளையே பத்திரிகையாளர்களாக மக்களிடம் பேட்டியெடுக்க செய்தோம். உத்தரப் பிரதேசத்தில் குழந்தைகளை வானொலிகள் மூலம் மக்களிடையே உரையாற்ற செய்தோம். டெல்லியின் நான்காவது பெரிய ஹிந்தி நாளிதழான அமர் உஜாலாவின் செய்தி ஆசிரியர்களுடன் குழந்தைகளை கலந்துரையாட செய்தோம்.
ஒடிசாவில் பழங்குடியினங்களை சேர்ந்த 100 குழந்தைகளின் சொந்த எழுத்துகளை பத்திரிக்கையில் வெளியிட்டோம். ஒரு குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு விளையாட்டு முக்கியமானது. எதிர்காலத்திற்காக திறன்களை வளர்ப்பதிலும், தலைமைத்துவத்தை மேம்படுத்துவதிலும் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனை குழந்தைகளுக்கு தடையின்றி வழங்க நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டோம். குழந்தைகள் உரிமை பிரிவு 2(1)இன் படி, எந்த குழந்தைகளுக்கும் இடையே இனம், நிறம், பாலினம், சமூகம், மதம், மொழி, அரசியல், வளம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை ஒழிக்க யுனிசெஃப் தொடர்ந்து உழைக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: International Children's day: 'குழந்தைகளுடன் நேரத்தை செலவழியுங்கள்’ பெற்றோர்களுக்கு வல்லுநர்களின் அட்வைஸ்...