கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பாலிகஞ்ச் என்ற இடத்தில், சஷ்டி தாஸ் (40) என்ற பெண்மணி சாலையைக்கடக்கும் போது, அதிவேகமாக வந்த 'ஜாகுவார்' சொகுசுக் கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த சஷ்டி தாஸுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கணவரை இழந்த அவர் வீட்டுப்பணியாளராக இருந்து வந்தார். பணி முடிந்து திரும்பும்போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஜாகுவார் காரை ஓட்டிவந்தவர் ரியல் எஸ்டேட் அதிபரின் மகன் சுயாஷ்(19) என்பதும், இவர் தனது தந்தையின் சொகுசுக் காரை ஓட்டிவந்ததும் தெரியவந்துள்ளது.
அதிவேகமாக காரை ஓட்டிய சுயாஷ், சஷ்டி மீதும், அங்கிருந்த இரண்டு கார்கள் மீதும் மோதியதாக போலீசார் தெரிவித்தனர். கவனக்குறைவாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சுயாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் போலீசார் குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க:ராஜஸ்தான் கோயில் கூட்டநெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழப்பு