டெல்லி: இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் ஜிதின் பிரசாதா புதன்கிழமை (ஜூன் 9) மதியம் 1 மணியளவில் டெல்லி பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
மத்திய அமைச்சர் முன்னிலையில் பாஜகவில் இணைந்த நிலையில் ஜிதின் பிரசாதா, “எனக்கு காங்கிரஸ் கட்சியுடன் மூன்று தசாப்தங்கள் தொடர்பு உள்ளது. நீண்ட விவாதம் மற்றும் ஆழ்ந்த யோசனைக்கு பின்னர் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். நான் கடந்த 8-10 ஆண்டுகளில் ஒன்றை உணர்ந்தேன். நாட்டில் ஒரு தேசியக் கட்சி இருக்கிறதென்றால் அது பாஜகதான். மற்ற கட்சிகள் பிராந்தியங்களுக்குள் சுருங்கிவிட்டது. பாஜக மட்டுமே உண்மையில் தேசியக் கட்சி” என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் முக்கிய முகமாக திகழ்ந்தவர் ஜிதின் பிரசாதா. இந்நிலையில் இவர் காங்கிரஸில் இருந்து விலகியிருப்பது அக்கட்சியின் புத்துயிர் திட்டங்களை பாதிக்கும். ஜிதின் பிரசாதா இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.
அதன்பின்னர் படிப்படியாக உயர்ந்து 2004ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்நிலையில் அவருக்கு 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஜிதின் பிரசாதா உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் பிராமண முகமாக இருந்து வருகிறார். பிராமண சமூகத்துக்காக பல்வேறு போராட்டங்கள் மற்றும் யாத்திரைகளையும் நடத்தியுள்ளார். அப்போது, பிராமணர்களை காங்கிரஸ் கைக்குள் இழுக்க அவர் அத்தகைய திட்டங்களைத் தொடங்கினார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், 2020 ஆகஸ்டில் ஈடிவி பாரதிடம் பேசிய ஜிதின் பிரசாதா, “நான் உத்தரப் பிரதேசத்தில் பிராமணத் தலைவராக வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், ஒரு அரசியல்வாதியின் எந்தவொரு நடவடிக்கையும் அரசியல் நோக்கம் கொண்டதாகக் கருதப்படுவது சரியானதுதான். ஆனால் இது அரசியல் சாராதது, வாக்குகளுக்காகவும் நடத்தப்படுவது அல்ல” என்றார்.
எவ்வாறாயினும், ஜிதின் பிரசாதாவின் தற்போதைய வெளியேற்றம், மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பிராமண வாக்காளர்கள் காங்கிரஸ் பக்கம் திரும்பும் வாய்ப்பை குறைக்கும் எனக் கூறப்படுகின்றன.
இதையும் படிங்க: தனிமரமான 90's கிட்ஸ்- சட்டத்தை மாற்றிய சீனா!