நமீபியா: இந்தியாவில் அழிந்துபோன பாலூட்டி இனமான சிவிங்கிப்புலி வகை சிறுத்தைகளை, 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக, நமீபியா நாட்டிலிருந்து 8 சிவிங்கிப்புலிகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன. ஐந்து ஆண் சிவிங்கப்புலிகள் மற்றும் மூன்று பெண் சிவிங்கப்புலிகள் கொண்டுவரப்படவுள்ளன. இவை வரும் 17ஆம் தேதி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய விலங்கியல் பூங்காவில் திறந்துவிடப்படவுள்ளது.
இந்த நிலையில், சிவிங்கப்புலிகளை கொண்டு வருவதற்காக B747 ஜம்மோ ஜெட் விமானம் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் நமீபியா சென்றடைந்தது. இந்த விமானத்தின் முகப்பில் புலியின் உருவத்தில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.
உட்புறத்தில் புலிகளை அடைப்பதற்கு தனித்தனியே கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பயணத்தில் புலிகள் உணவு உண்ணாமல், வெறும் வயிற்றோடுதான் இருக்க வேண்டும் என்றும், உணவு உட்கொண்டால் சில நேரங்களில் உடல்நலக்குறைபாடு ஏற்படக்கூடும் என்றும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
எரிபொருள் நிரப்புவதற்காக விமானத்தை இடையே நிறுத்தினால் புலிகளுக்கு அசவுகரியம் ஏற்படும் என்பதால், இடைநிறுத்தம் இல்லாமல் 16 மணி நேரம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த விமானத்தை தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: 70 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப்புலிகள் - வரலாறு தெரியுமா?