ஜான்சி: இனிப்புகளில் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று ரசகுல்லா. அனைத்து கடைகளிலும் ரசகுல்லா ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால், ஜான்சியில் இனிப்புக் கடை வைத்துள்ள பாண்டே ஜி தயாரிக்கும் ரசகுல்லா சற்று வித்தியாசமானது. வழக்கம்போல் நெய் மற்றும் கோவாவை பயன்படுத்தி தயாரித்தாலும், அவர் தயாரிக்கும் ரசகுல்லா அளவில் பெரியது.
இந்த அளவு பெரிய ரசகுல்லாவை நம்மால் வேறு எங்கும் பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது. ஜான்சிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், பாண்டே ஜியின் ரசகுல்லாவை சுவைப்பதற்காக தேடி வருகிறார்கள். அதேபோல், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அவருக்கு ஆர்டர்கள் வருகின்றன.
இதுகுறித்து பாண்டே ஜி பேசுகையில், "1963ஆம் ஆண்டு முதல் ரசகுல்லா தயாரித்து வருகிறேன். எனது தந்தை இனிப்பு கடை நடத்தி வந்தார். அப்போதைய காலகட்டத்தில் அனைவரும் பேடா மட்டுமே தயாரித்து வந்தனர். அதனால், புதிதாக ஏதாவது தயாரிக்கலாம் என எண்ணி, எனது தந்தை ரசகுல்லா தயாரித்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

நான் தயாரிக்கும் ரசகுல்லா சுமார் 150 கிராம் முதல் 200 கிராம் வரை இருக்கும். கஜுராஹோ, மத்திய பிரதேசத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எனது கடையைத் தேடி வருகிறார்கள். நான் தயாரிக்கும் ரசகுல்லா, கரண்டியில் எடுக்க முடியாத அளவுக்கு மிருதுவாக இருக்கும், ஒரே வாயாக போட்டு சாப்பிட முடியாது. அப்படி சாப்பிட்டு காட்டினால், ஆயிரம் ரூபாய் பரிசும், ஆஃபரும் வழங்கப்படும். இதற்காகவே சுற்றுலாப்பயணிகள் எனது கடைக்கு ஆர்வமாக வருவார்கள். ஜான்சிக்கு வரும் அனைவருக்கும் எனது ரசகுல்லாவை சாப்பிட ஆசை வரும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆசையாக வளர்த்தவரை கடித்த செல்லப்பிராணி பிட்புல் - மூதாட்டி உயிரிழப்பு!