புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் விநாயகருக்கு, ஜெயின் ஸ்வீட் கடையின் உரிமையாளர், 108 கிலோவில் பிரம்மாண்டமான லட்டு தயார் செய்து படையல் வைத்து சிறப்பு பூஜை செய்தார்.
விநாயகர் சதுர்த்தி விழாவானது நேற்று (செப்.18) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.
புதுச்சேரி 45 அடி சாலையில் அமைந்துள்ள ஜெயின் ஸ்வீட் கடையின் உரிமையாளர் விக்ரம். இவர் கடந்த 20 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி தினங்களில் பெரிய அளவில் லட்டுகளை தயார் செய்து விநாயகருக்கு படையல் செய்வது வழக்கம். அதன்படி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 11 கிலோ லட்டு செய்து படையல் செய்ய தொடங்கிய விக்ரம், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டாக 5 கிலோ எடைகளை அதிகரித்து தற்போது 20 ஆம் ஆண்டாக 108 கிலோ லட்டு தாயாரித்துள்ளார்.
இதையும் படிங்க: டாப்சிலிப் முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. விஷேச உணவுகளை உண்டு மகிழ்ந்த யானைகள்!
இந்நிலையில், விழாவினை காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முதல்வரின் பாராளுமன்ற செயலருமான ஜான் குமார் கலந்து கொண்டு விநாயகர் மட்டும் லட்டு பிரசாதத்திற்கு ஆரத்தி காண்பித்து பூஜை செய்தார்.
மேலும், இது குறித்து விக்ரம் கூறுகையில், “விநாயகர் பெருமானுக்கு லட்டு மிகவும் பிடிக்கும் என்பதால் கடந்த 20 ஆண்டுகளாக மெகா சைஸ் லட்டு தாரித்து வைத்து படையல் செய்து வருகிறேன். எல்லோரும் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகரை பெருசாக வைப்பார்கள். ஆனால் நான் ஸ்வீட் கடை வைத்திருப்பதால், லட்டை பெருசாக வைத்திருக்கிறேன் என்றார்.
அதனைத்தொடர்ந்து, எல்லாம் வல்ல அருளும் கிடைப்பதற்காக ஆண்டுதோறும் 5 கிலோ வீதம் எடைகளை கூட்டி தற்போது 20 ஆம் ஆண்டாக 108 கிலோ எடையில் லட்டு வைத்து படையல் செய்திருக்கிறேன். இந்த 108 கிலோ லட்டும் மூன்று நாள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் இதை தொடர்ந்து நான்காவது நாள் அனைவருக்கும் பகிர்ந்து பிரசாதமாக வழங்கப்படும்” என்று கூறினார்.
இந்நிலையில், விநாயகருக்கு வைத்து படைக்கப்பட்டுள்ள 108 கிலோ எடை கொண்ட லட்டை ஏராளமான பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.
இதையும் படிங்க: 13 அடி தேங்காய்க்குள் விநாயகர் சிலை.. வியப்புடன் விநாயகரை தரிசித்த பொது மக்கள்!