பெங்களூரு(கர்நாடகா): தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கிராந்திவீர சங்கொல்லி ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காலை 9 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, கவர்னர் தாவர்சந்த் கெலாட், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன் பிறகு அவர் அங்கிருந்து கார் மூலம் விதான சவுதாவுக்கு சென்றார். கனகதாசர் ஜெயந்தியையொட்டி அங்குள்ள கனகதாசர் மற்றும் வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பிரதமர் மோடி கார் மூலம் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு சென்னை - மைசூரு வந்தேபாரத் அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரயில் பெங்களூரு வழியாக மைசூரையும் சென்னையையும் இணைக்கிறது. மேலும் அங்கு பாரத் கவுரவ் காசி தரிசன ரெயில் சேவையையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
"காசி யாத்திரை மேற்கொள்ள விரும்பும் ஏராளமான பயணிகளின் கனவை இது நிறைவேற்றும்" என தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில் யாத்ரீகர்களுக்கு தள்ளுபடி விலையில் எட்டு நாள் சுற்றுலாப் பேக்கேஜ் வழங்குகிறது. காசி விஸ்வநாதர் யாத்திரை பக்தர்களுக்கு கர்நாடக அரசு 5,000 ரூபாய் நிதியுதவி வழங்குகிறது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ரயில் பயணம் வாரணாசி, அயோத்தி மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட புனித இடங்களை உள்ளடக்கியது.
இதையும் படிங்க: இன்று திண்டுக்கல் வருகிறார் மோடி...பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..