மும்பை : மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் ரமேஷ் பயஸ் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் இருந்து வந்தார். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைமையின் மீது கடந்த சில நாட்களாக அஜித் பவார் அதிருப்தி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவிற்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் அஜித் பவார் அதிருப்தியில் இருந்தததாக கூறப்படுகிறது. அண்மையில் கட்சியின் செயல் தலைவர் பதவிக்கு சுப்ரியா சுலே நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனல் கடும் அதிருப்தி அடைந்த அஜித் பவார் ஆளும் சிவசேனா- பாஜக கூட்டணியில் இணைந்து உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 30 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அஜித் பவார் தலைமையில் ஒன்று திரண்டு மகாரஷ்டிர அரசில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் அஜித் பவார் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ரமேஷ் பயசை சந்தித்தார்.
இதையடுத்து மகாராஷ்டிர அரசில் அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. ஆளுநர் முன்னிலையில் துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். மேலும் அஜித் பவார் அணியைச் சேர்ந்த 9 எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிர சட்ட சபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களின் பலம் 53 என்று இருந்த நிலையில், 30 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக - சிவசேனா கூட்டணியில் தங்களை இணைத்துக் கொண்டதால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 23 ஆக குறைந்து உள்ளது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகின்றன. பெங்களூரில் அனைத்து எதிர்க் கட்சிகளின் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் ஜூலை 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அண்மையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்து இருந்த நிலையில மராட்டிய அரசியலில் ஏற்பட்டு உள்ள இந்த அதிரடி திருப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : Ajit Pawar : மகாராஷ்டிர துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்பு!