இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை நாடு முழுவதும் இன்று (ஜனவரி 8) நடைபெற்ற நிலையில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன், மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "குறுகிய காலக்கட்டத்தில் தடுப்பூசிகளை தயாரித்து இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. அடுத்த சில நாள்களில், விரைவில், நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். மருத்துவ ஊழியர்களை தொடர்ந்து, முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.
உயர்மட்ட அளவிலிருந்து அடிமட்ட அளவு வரை தடுப்பூசி விநியோகம் குறித்த அனைத்து தகவல்களும் மக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதை அரசு உறுதி செய்துள்ளது. இந்த ஒத்திகையின் மூலம் லட்சக்கணக்கான சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பலருக்கு பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது" என்றார்.
இதைத் தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை, செங்கல்பட்டு தடுப்பூசி மையங்கள் ஆகிய இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.