இதுவரை இல்லாத அளவு, டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்போதிலும் லாபத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு எரிபொருள் வரியை உயர்த்தியுள்ளதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, மக்கள் அதிக விலை கொடுத்து பெட்ரோல், டீசல் ஆகியவற்றை வாங்கவில்லை. அந்த அளவுக்கு, வரி வதிப்பை குறைக்க வேண்டும். ஒரு லிட்டர் டீசல் 74.38 ரூபாய்க்கும் பெட்ரோல் 84.20 ரூபாய்க்கும் விற்கப்பட்டுவருகிறது. 73ஆண்டு கால நாட்டின் வரலாற்றில், இதுதான் அதிகபட்ச விலை நிர்ணயமாகும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவின் மூலம் பெறப்படும் பயன்களை மக்களுக்கு அளிக்காமல் கலால் வரியை உயர்த்தி அரசு லாபம் பார்க்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும், 19,00,000 கோடி ரூபாயை கலால் வரியாக அரசு மக்களிடமிருந்து வசூலித்துள்ளது" என்றார்.