டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல்காந்தி இருவரும் டெல்லியில் உள்ள அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜராகும்படி கடந்த ஜூன் 8ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சோனியாகாந்தி கரோனா காரணமாக, விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டார். இதனால் ஜூன் 21ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதேபோல, ராகுல்காந்தி வெளிநாட்டிலிருப்பதாகக் கூறி விலக்கு கேட்டார்.
இதனால் அவருக்கு ஜூன் 13ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை அவகாசம் அளித்தது. இதன்படி ராகுல்காந்தி ஜூன் 13ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து 5 நாள்களுக்கும் மேலாக அமலாக்கத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இன்று (ஜூலை 21) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா காந்தி ஆஜராகினார்.
அவருடன் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பிரியங்கா காந்தியும் சென்றுள்ளார். இதனிடையே காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. குறிப்பாக டெல்லியின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. முக்கிய சாலைகளில் போக்குவரத்தை தவிர்க்க டெல்லி காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு வழக்கின் வரலாறும்... முழுப் பின்னணியும்...