டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி (76) கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் அதிகமானதால், டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுக்குழாயில் ஒவ்வாமை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மூத்த மருத்துவர் அரூப் பாசு தலைமையிலான மருத்துவக்குழுவினர் சோனியா காந்திக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். காய்ச்சல் குணமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது நலமுடன் இருக்கிறார். மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்" என கூறப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் இரண்டாவது முறையாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் சுவாசப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோனியா காந்திக்கு தற்போது காய்ச்சலுடன் மூச்சுக்குழாய் அழற்சி (Bronchitis) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நுரையீரலுக்கு காற்றை கொண்டு செல்லும் குழாய்களில் ஒவ்வாமை ஏற்பட்டு இந்நோய் உருவாகும். இதனால் இருமல், மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படும். காற்று மாசு, நெடி மிகுந்த ரசாயனங்களால் இதுபோன்ற நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை தலைவராக இருந்தவர், சோனியா காந்தி. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு ராகுல்காந்தி காங்கிரஸின் தலைவரானார். 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மூத்த தலைவர்கள் பலமுறை சமரசம் செய்தும், காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி மறுத்துவிட்டார். இதையடுத்து கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே சோனியா காந்திக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புதிய தலைவரை தேர்வு செய்ய கட்சி தீவிரம் காட்டியது. அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸின் புதிய தலைவராக அவர் பொறுப்பேற்றார். அதன்பிறகு கட்சியில் நடக்கும் முக்கிய கூட்டங்களில் மட்டும் பங்கேற்கும் சோனியா காந்தி, ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
அண்மையில் ராய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். மாநாட்டில் உரையாற்றிய அவர், "காங்கிரஸ் கட்சிக்கு தேசிய ஒற்றுமைப் பயணம் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்த யாத்திரையுடன் எனது அரசியல் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும். வரும் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஐநாவில் பேசிய நித்தியானந்தா சிஷ்யை பரபரப்பு குற்றச்சாட்டு