பனாஜி: ஹரியானா மாநிலத்தைச்சேர்ந்த நடிகையும், பாஜக மகளிரணி நிர்வாகியுமான சோனாலி போகத் (42) கோவாவில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சோனாலி போகத்தின் உதவியாளர்கள் இருவர் உள்பட ஐந்து பேரை கைது செய்தனர். சோனாலிக்கு அதிகளவு போதைப்பொருள் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
சோனாலி மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடும்படி கோவா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சோனாலி போகத் மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். பனாஜியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சாவந்த், "சோனாலி போகத் மரண வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக சோனாலியின் மகள் கோரியுள்ளார். அதனால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுத இருக்கிறேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: சோனாலி போகத் மரண வழக்கில் மேலும் 3 பேர் கைது