புதுச்சேரி: நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் மக்கள் சிக்கி வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது. இதைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர், கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஜூலை.9) புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் சைக்கிளில் தனியார் கல்வி கொள்கையை கண்டித்து பேனர் வைத்தபடி புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்துள்ளார்.
இதையடுத்து, சட்டப்பேரவை முன்பு திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபடத் தொடங்கினார். இதைப் பார்த்த காவல் துறையினர், அவரிடம் சட்டப்பேரவை முன்பு தர்ணாவில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினர்.
மேலும் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல் நிலையம் அழைத்து சென்றனர். சமூக ஆர்வலரின் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.