குல்லு: இமாச்சலப் பிரதேசத்தில் உலகின் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதை கடந்த 2020ஆம் ஆண்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டது. மணலி, லே உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதை, போர்க் காலங்களில் பொது மக்களை விரைந்து வெளியேற்றவும், எல்லைகளுக்கு ராணுவ துருப்புகளை உடனடியாக கொண்டு சேர்க்கவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 5 மாதங்கள் ரோட்டங் கணவாய் பனி மூடி காணப்படுவதால், வெளி உலக தொடர்புகளை இழந்து தவிப்பதாகவும் சுரங்கப்பாதை அமைத்து தரக் கோரியும் அப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்த நிலையில் 2020ஆம் நிறைவேற்றப்பட்டது.
நடப்பாண்டு இமாச்சலப் பிரதேசத்தில் கட்டுக்கடங்காத அளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. அடல் சுரங்கப்பாதையில் தெற்கு மற்றும் வடக்கு நுழைவுவாயில்களில் வழக்கத்திற்கு மாறாக பனி அதிகமாக பொழிந்துள்ளது. இதனால் பாதை தடைபட்டு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கித்தவித்து வருகின்றன.
அடல் சுரங்கப்பாதையின் வடக்கு மற்றும் தெற்கு நுழைவு வாயில்களில் உள்ள துண்டி நுல்லா பகுதிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இரு வழிகளிலும் ஏறத்தாழ 500 சரக்கு லாரிகள், 400 கார்கள் உள்பட வாகனங்கள் சிக்கி உள்ளதாகவும், 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பனியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் இமாச்சலப் பிரதேச போலீசார், மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். குல்லு மாவட்டம், லாஹூல் பள்ளத்தாக்கு பகுதியில் மேற்கொண்டு நகரமுடியாமல் அணிவகுத்து நிற்கும் வாகனங்களை வெளியேற்றும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பனி சூழ்ந்து கிடக்கும் சாலையில் வாகனங்களின் டயர்கள் வழுக்குவதால் சுற்றுலா வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாகவும், விபத்துகளை தவிர்க்க மேற்கொண்டு வாகனங்களை செலுத்தாமல் சுரங்கப்பாதை பகுதியில் அணிவகுத்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவில் சிக்கிய 400 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், போதிய வெளிச்சமின்மை உள்ளிட்ட காரணங்களால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டதாகவும் குல்லு மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கங்கையில் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து - மீட்பு பணி தீவிரம்...