டெல்லி: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் (SCM) 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்களில் ரூ.88,673 கோடி செலவில் 2,752 திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மொத்தமாக ரூ.1,81,112 கோடி மதிப்பிலான 7,738 திட்டங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டன. அதில் ரூ.92,439 கோடி மதிப்பிலான 4,987 திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அண்மையில் மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக ரூ.34,399 கோடியை மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது.
அதில் ரூ.30,400 கோடியை (88 சதவீதம்) மாநிலங்கள் பயன்படுத்தியுள்ளன. அதிகபட்சமாக தமிழ்நாட்டிற்கு ரூ.4,937 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ.4,589 கோடியை மாநில அரசு பயன்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் ரூ.10,910 கோடி மதிப்பிலான 78 திட்டங்களும், மத்தியப் பிரதேசத்தில் ரூ.10,037 கோடி மதிப்பிலான 223 திட்டங்களும், சத்தீஸ்கரில் ரூ.2,931 கோடி மதிப்பிலான 255 திட்டங்களும், ஆந்திராவில் ரூ.5,437 கோடி மதிப்பிலான 102 திட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசு 2015ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2018ஆம் ஆண்டு ஜூன் வரை நான்கு சுற்றுகாளாக 100 ஸ்மார்ட் நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த 100 நகரங்களின் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவடைந்த உடன் ஒரு நகரம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.48,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசுக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை மாநிலங்களைவில் இன்று (டிசம்பர் 12) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுசல் கிஷோர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்தை கொண்டுள்ளது: வி.கே.சிங்