டெல்லி: கடந்த 8ஆம் தேதியன்று, ZP 5164 என்ற எண் கொண்ட எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர், இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி (CDS) பிபின் ராவத், அவரது படையினரை, சூலூர் விமான படைத்தளத்திலிருந்து வெலிங்டனுக்குக் கொண்டுசெல்ல இருந்தது. ஆனால் அது குன்னூர் அருகே, நண்பகலில் ஏற்பட்ட பனிமூட்டத்தால் விபத்து ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கியது.
போர் விமானங்களைக் கையாளுவதில் தேர்ந்தவர்
விமான படையில் சிறந்தவரும், ஜாகுவார்ஸ் முதல் தேஜஸ் போர் விமானங்களைப் பறக்கவிட்டவருமான வருண் சிங், அவசரகால - நெருக்கடியான சூழ்நிலைகளில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பதில் புதியவர் அல்ல.
2020 அக்டோபர் 12 அன்று, விங் கமாண்டராக இருந்த வருண் சிங், தேஜஸ் எல்.சி.ஏ.வில் அதிக உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென விமானம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுகொண்டிருந்தது.
ஆனால் விங் கமாண்டர் சிங், அதற்குத் துளியளவுகூட அஞ்சவில்லை. அமைதியுடன் மிகத் துல்லியமாகச் செயல்பட்டு, விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவந்தார். அதன்மூலம் தனது திறனை வெளிப்படுத்தினார்.
சௌரிய சக்ரா விருது
மேலும், அசுரத்தனமாக வலது-இடது புறங்களில் அசைந்துகொண்டிருந்த போர் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க அவர் மேற்கொண்ட அசாதாரண துணிசசலையும், திறமையையும் பாராட்டியே ஆக வேண்டும். அதற்கு முத்தாய்ப்பாக அவரது துணிச்சலான செயலுக்காக சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது. மேலும் குரூப் கேப்டனாகப் பதவி உயர்வும் கிடைத்தது.
மக்களைக் காத்தவருக்கு நேர்ந்த சோகம்
ஆனால் தற்போது நடந்த இந்த விபத்தில், அவர் பைலட் கடமையையும் தாண்டி, கணக்கிடப்பட்ட ஆபத்துகளை எடுத்துக்கொண்டு விமானத்தைத் தரையிறக்கினார் எனக் கூறப்படுகிறது.
தற்போது நமது நாடு, முப்படையின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு அஞ்சலி செலுத்தி துக்க கரமான விடைகொடுத்துள்ளது. இந்த நிலையில் அதி தீவிர மருத்துவப் பிரிவில் உள்ள வருண் சிங்கின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாகவே இருந்துவருவது வேதனை அளிக்கிறது.
இதையும் படிங்க: விடைபெற்றார் பிபின் ராவத்: ராணுவ மரியாதையுடன் நடைபெற்ற இறுதிச் சடங்கு